Monday, March 21, 2011

அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்

அதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியமும்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பிரச்னை உருவான போது அதில் பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில் கல்லூரியின் மாணவர் மற்றும் கல்வி நலனுக்காக நாங்கள் போராடினோம். அந்த அடிப்படையில் தற்போது கல்வியின் பால் அக்கறை கொண்ட மதுரை மக்களின் மனதில் இருப்பதாக நாங்கள் உணரும் சில கேள்விகளுக்கான பதில்களை முன்வைப்பது இது குறித்து நிலவும் குழப்ப நிலையை அகற்ற உதவும் என்று கருதி அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் முன் வைக்கிறோம்.

தற்போதைய அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை என்ன? அதற்குக் காரணம் யார்?
 மதுரை ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் தலைமையில் இயங்கும் ஆட்சிமன்றக் குழுவினால் நியமிக்கப்பட்ட ஒருவர் தற்போது கல்லூரி முதல்வராக இருப்பதே தற்போதைய அமெரிக்கன் கல்லூரியின் பிரச்னை. இப்பிரச்னை உருவாகக் காரணம் இந்த  நியமனத்திற்குத்  தமிழ் நாட்டின்  கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அளித்துள்ள தவறான ஒப்புதலே.



எப்படி கல்லூரிக் கல்வி இயக்குனரகம் தவறிழைத்துள்ளது என்று கூற முடியும்?
கல்லூரியைப் பொறுத்தவரையில் இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தாங்கள் தான் உண்மையான ஆட்சிமன்றக் குழு என்று கூறிக் கொண்டிருந்தன. எது உண்மையான ஆட்சிமன்றக் குழு என்பது குறித்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓய்வு பெற்று விட்டால் அந்த முதல்வரால் நியமிக்கப்படுபவரே அடுத்து முதல்வராக வர வேண்டும். ஏனெனில் தற்போது நிலுவையில் உள்ள ஆட்சிமன்றக் குழு குறித்த தீர்ப்பு வந்து அதன் அடிப்படையில் ஒரு புது ஆட்சிமன்றக் குழு வரும்வரை அதற்கு முன்பிருந்த நிலை நீடிப்பதே முறை. அந்த அடிப்படையில் தான் முன்னாள் முதல்வர் திரு.சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்கள் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பணியமர்த்தப் பட்டார்.

எந்த அமைப்பிலும் அல்லது ஆட்சிமன்றக் குழுவிலும் தலைவர் பதவி என்பது வெறும் அலங்காரமான பதவியே. அமெரிக்கன் கல்லூரியின் ஆட்சிமன்றக் குழுவைப் பொறுத்தவரையில் தலைவர் பதவி மரியாதை நிமித்தமாக  பேராயருக்கு வழங்கப்பட்டதே.மேலும் அவர் ஒரு கல்விமானும் அல்ல. இந்த நிலையில் ஆட்சிமன்றக் குழுவின் மிகமுக்கிய, கல்லூரி நிர்வாகம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்புகளைக் கொண்ட பதவி செயலர் பதவியே. அப்பதவி வகிக்க கல்லூரி விதிமுறைப்படித் தகுதியுள்ளவர் கல்விமானான கல்லூரி முதல்வரே. அவ்வாறு இறுதியாக கல்லூரி முதல்வர் பதவியை வகித்தவர் என்ற ரீதியில் திரு.சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்கள் நியமிக்கும் ஒருவரே அவருக்கு பின் அடுத்த முதல்வராக வந்திருக்க வேண்டும். அதாவது சட்ட மொழியில் கூறுவதானால் இறுதியில் நிலவிய சட்டப்பூர்வ நிலையின் இயல்பான தொடர்ச்சியாகவே அடுத்து வரும் நிலை இருக்க வேண்டும். இது சாதாரண மனிதர்களின் கண்களுக்குக் கூடப் புலப்படும் உண்மை. இது கல்லூரிக் கல்வி இயக்குனருக்குப் புலப்படாமல் போனதன் காரணம் என்ன? கையூட்டா அல்லது வேறெதுவுமா?

எப்படியோ தற்போது ஒருவர் முதல்வராக நியமிக்கப் பட்டுள்ளார். அந்நிலையில் மாணவர்களின் கல்வி நலனை மனதிற்கொண்டு ஆசிரியர்கள் பணிக்குத்  திரும்பக் கூடாதா?
ஆசிரியர் அனைவரும் பணிக்கு மீண்டும் சென்றால் தற்போது பேராயரால் முறைகேடாகத் திணிக்கப்பட்டு கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் முறை தவறி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவர் முதல்வர் என்ற அங்கீகாரத்தைப் பெற்று விடுவார். அந்த அடிப்படையில் இனிமேல் இறுதியில் நிலவும் நிலையாக இந்த முறைகேடான முதல்வர் பொறுப்பு அமைந்துவிடும். அதன் விளைவாக தற்போதைய முதல்வர் அடுத்த செயலராக ஆகி விடுவார். அவரைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு சட்ட ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பு உருவாகி விடும். அதன் விளைவாகக் கல்லூரியில் பேராயரின் திரைமறைவு நிர்வாகம் நிலை பெற்றுவிடும். இந்த நிலையில் இந்த முறைகேடு தொடராமல் இருப்பதற்காக ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருப்பது மிகவும் சரியானதே.

ஆசிரியர்கள் போராடுவது சரியானதாக இருந்தாலும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மாணவர்களின் கல்வி அல்லவா? எனவே தங்களது கல்வியில் அக்கறை காட்டி மாணவர்கள் ஏன் வகுப்புகளுக்குச் செல்லக் கூடாது?
பெரும்பாலான துறைகளின் ஆசிரியர்கள் வெளியில் இருப்பதால் மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றாலும் அவர்களுக்குச் சரியான கல்வி கிடைக்காது. எனவே நீண்டகால அடிப்படையில் அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தைப் பாதிக்க வல்லதான இந்த முறைகேட்டைத் தடுப்பதற்காக, போராடும் ஆசிரியர்களோடு மாணவர்களும் இணைந்து நின்று போராடுவதே சரியானது.

பேராயரின் ஆதிக்கத்திலிருக்கும் ஆட்சிமன்றக் குழு வசம் கல்லூரி நிர்வாகம் சென்றால் குடியா முழுகிவிடும்? அதனை ஏன்  இத்தனை தீவிரமாக  எதிர்க்க வேண்டும்?முதற்கண் கல்வி நிறுவனங்கள் கல்வி மான்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கண்ணின் கருமணி போன்ற கண்ணோட்டம் காப்பாற்றப்பட வேண்டும். கல்வியோடு ஒரு தொடர்பும் இல்லாத பேராயர் கரங்களில் நிர்வாகம் சென்றால் கல்வி மட்டுமல்ல கல்வி வளாகமும் கூட வணிகப் பொருளாகிவிடும்.

கல்விமானாக இல்லாதவர்களுக்கு கல்வியின் மேல் அக்கறை என்பதே இருக்க முடியாதா?
விதிவிலக்காக ஒருசிலர் அத்தகையவர்களாக இருப்பது சாத்தியமே என்றாலும் தற்போதைய பேராயரின் கடந்த காலச் செயல்பாடுகளும் கணக்கிற் கொள்ளப்பட வேண்டும். அவர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதற்கு பிரச்னை இத்தனை காலம் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அதனை முறையாகத் தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் அவர் எடுக்காது இருப்பதே எடுத்துக்காட்டு.

அவ்வாறு அவர் இருப்பது தற்செயலானதாகக் கூட இருக்கலாமல்லவா?
நிச்சயமாகத் தற்செயலானதல்ல. எப்படியாவது ஒருவகை கல்லுளிமங்கத் தனத்தோடு பணிமூப்பு எய்துவதற்கு சில மாதங்களே உள்ள தற்போதைய முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ள முதல்வரை கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் கயமைத் தனமான ஒத்துழைப்போடு நீடிக்கச் செய்து விட்டால் அவரது பணிக்காலம் முடிந்த பின் ஏற்கனவே கல்லூரியில் பேராசிரியர்களாக உள்ள தனது உறவினர்களையும் கைபாணங்களையும் கொண்டு முதல்வர், துணை முதல்வர், நிதிக் காப்பாளர் பதவிகளை நிரப்பி ஆட்சிமன்றக் குழுவை முழுமையாக தன் கைவசப்படுத்திக் கொள்ளலாம் என்பதே  அவரது திட்டம். அதன்பின் அவர் விரும்பிய விதத்தில் கல்வியை வணிகமயமாக்கவும் கல்வி வளாகத்தை விலை பொருளாக்கி மத நிறுவனத்திற்கு நிதி சேர்ப்பதாகப் பாவனை செய்து தனக்கெனச்  சொத்துக் குவிக்கவும் அவரால் முடியும்.

இந்நிலையில் கல்லூரியை பழைய மதிப்போடும் மாண்போடும் மீண்டும் இயங்கச் செய்வதற்கு வாய்ப்பே இல்லையா?
நிச்சயம் உண்டு. இதைப் போன்ற நிறுவனங்களான தாம்பரம் கிறித்தவக் கல்லூரியும் டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியும் இயங்கும் அடிப்படைகளில் இந்தக் கல்லூரியும் இயங்க அனுமதிக்கப்பட்டால் அதன் மாண்பும் நற்பெயரும் மங்காது நிலைபெற வாய்ப்புண்டு. அவ்வாறு கொண்டு வருவதற்கு கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு அடிப்படையே மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

ஆட்சிமன்றக் குழு அடிப்படையில் மதச்சார்பற்ற ஒன்றாக முழுமையாக ஆக்கப்பட வேண்டும். மக்கள் சேவையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த மதம் என்ற ரீதியில் கல்விக்காக கிறித்தவ மதம் ஏதாவது செய்ய முன்வரலாமே தவிர கல்வி நிலையங்களில் இருந்து ஆதாயம் பெறும் அமைப்பாக அது ஒருபோதும் ஆக அனுமதிக்கப்படக் கூடாது. மேலும் அவ்வாறு ஆக்க நினைப்பது  கிறித்தவ மதத்தின் அடிப்படைத் தன்மைக்கும்  எதிரானது.

எனவே இன்றைய இந்த நிலையில் அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதைய முதல்வர் நியமனத்தை எதிர்த்த போராட்டம் கல்விக்கான போராட்டமே. பலர் நினைப்பது போல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஒரு குழுவினருக்கு ஆதரவான போராட்டமல்ல.

கல்வியின் பால் அக்கறை கொண்ட பொது மக்களே அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னையில் உங்கள் மனதில் இருக்க வாய்ப்புள்ளதாக நாங்கள் நினைக்கும் அத்தனை கேள்விகளையும் எழுப்பி அவற்றிற்கான விடைகளையும் கொடுத்துள்ளோம். இப்போது நாங்கள் உரிமையுடன் தங்களிடம் ஒரே ஒரு கேள்வியினை எழுப்ப விரும்புகிறோம்: 

                               இந்த நிலையில் கல்விக்கானதும்,
                               ஏழை எளியவரின் தரமான கல்வி வாய்ப்பிற்கானதுமான
                               இப்போராட்டதிற்குத்
                               தங்களின் ஆதரவுக் கரத்தினை நீட்ட
                               தாங்கள் ஏன் தயங்காமல் முன்வரக் கூடாது?


இக்கேள்விக்கான ஆக்கபூர்வ பதிலை    நடைமுறை ரீதியாக எதிர்பார்க்கும்

மாணவர் ஜனநாயக இயக்கம்,(SDM), தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் ப்ளாட் ஃபார்ம்,(CWP), தமிழ்நாடு

தொடர்புக்கு: தோழர் டேவிட் வினோத் குமார் (SDM), செல்: 9003828065
தோழர் நிம்ரோத் ஆனந்த் (SDM), செல்:9442486786

No comments:

Post a Comment